சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்
சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்
(அடிமைத்தமிழை அரசாளும் தமிழாக்கினார்)
இந்தியாவிற்கு வர்த்தகத்திற்காகவும் சமயத்திற்காகவும் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஜெர்மானியர்கள் வந்தாலும் வர்த்தகர்களைக்காட்டிலும் சமயத்திற்காக வந்தவர்கள் இந்திய மொழிகளில் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். ஆனாலும் பிராசிஸ் சேவியர் போன்ற சமயப்பரப்பாளர்கள் இந்திய மொழியைக் கற்றுக்கொள்ளாமல் வாடகைக்கு மொழிபெயர்ப்பாளர்களை ஏற்படுத்தி ஊழியம் செய்தார்கள். மாறாக இந்திய மொழியைப்பயின்று குறிப்பாகத் தமிழ்மொழி பயின்று ஊழியம் செய்தவர்களில் உரோமன் கத்தோலிக்கச் சமயத்தார் முதல் வரிசையில் இருக்கிறார்கள்; அவர்கள் இராபர்ட் டி நோபிலி, வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட பெஸ்கி ஆவர். ஆனாலும் அவர்கள் ஆற்றியப்பணியைத்தாண்டி சீர்த்திருத்தச் சபைகளைச்சார்ந்த மிஷனெரிகள் அநேகர் இந்திய மொழிகளைக்கற்று, அவைகளில் வேதாகமங்களை மொழிபெயர்த்து, பலநூல்கள் எழுதி, இந்திய மொழிகளை உலகறியச்செய்தார்கள். அவர்களில் உலகின் மூத்த மொழியும், மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகியத் தமிழ் மொழியின் அருமைகளையறிந்து, அதனைக்கற்று, முதன் முதலில் இந்தியாவில் மொழிபெயர்ப்பு செய்து, தமிழ் வேதாகமம் உருவாகவும் அதனைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவரக்காரணமாயிருந்தவர்கள் பலர்: அவர்கள் சீகன்பால்க், கால்டுவெல், ஜி.யு.போப் மற்றும் எல்லிஸ் போன்றவர்கள் ஆவர்.
சீகன்பால்க் ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்கு முதல் பிராட்டஸ்டன்ட் மிஷனெரியாக வந்தார். சீர்த்திருத்தச் சபையிலிருந்து வந்ததால் அவருடைய இருதயத்தில் சீர்த்திருத்தச் சிந்தையும் செயலும் இயல்பாகவே இருந்தது என்பதற்கு அவருடைய சீர்த்திருத்தச் செயலிலிருந்து அறிகிறோம். வரலாறு அதற்கு சான்று. அடிப்படையில், ஒரு தனிநபரில் ஏற்படுகிற சீர்த்திருத்தம் ஒரு சமூகத்தில் ஏற்படும் சீர்த்திருத்தம். சமூகச் சீர்த்திருத்தம் அதன் மொழியை மீட்டெடுப்பதில் ஆரம்பமாகிறது. மொழி வளர்ச்சியின்மை அல்லது அடிமையே ஒரு சமூகம் அடிமைப்படுவதற்கு அல்லது அழிவதற்கு ஆரம்பம், மொழிகள் பல இருந்தாலும் ஒரே மொழி பலவகையாக இருப்பதையும் நாம் அறிவோம். அவைகள் வட்டார மொழி, தொழில் மொழி, சமய மொழி, சாதிய மொழி, கலப்பு மொழி உள்ளிட்ட பலவாகும். இந்தியாவிற்கு வந்த சீகன்பால்க் தமிழ் மொழியின் அன்றைய நிலையைப் புரிந்து கொண்டார். பிராமணர்கள் உருவாக்கிய சமஸ்கிரத மொழியை இறைமொழியாக முன்வைப்பதற்காகவும் தமிழ் மொழியில் உள்ள சமயக் கருத்துக்களைப் பின்தள்ளுவதற்காகவும் தமிழையும் தமிழர்களையும் தாழ்ந்தவர்களாகவும் சித்திரித்தார்கள். பிராமணர்களே ஐரோப்பியர்களுக்கு நெருக்கமாக இருந்ததால் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை . அவர்களும் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினர். தமிழரை அநாகரீகர்களாகக் கருதினர், சீகன்பால்க்கும் அந்தப்படியே நினைத்திருந்தார். அவர், தமிழுடனும் தமிழர்களுடனும் நெருங்கிய உறவு கொண்டபின்னரே அவரது எண்ணம் மாறியது.
"நானும் தமிழ் மொழி தரம் குன்றியது என்றும், தமிழர் வாழ்க்கை தாறுமாறானது என்றும் நினைத்தேன். தமிழ் மொழியைப்பயின்றேன். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தழிழரோடு உரையாடினேன், உறவாடினேன். அதன்பின்னர் என் எண்ணத்தை முற்றிலும் திருத்திக்கொண்டேன். தமிழ் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கண விதிகள் மிகச்சிறந்தமுறையில் அமைக்கப் பெற்றுள்ளன. எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள். பலகலைகளில் புலமை எய்தியவர்கள். வரணிபத்திலும் ஓவியத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுடைய ஆட்சிச்சட்டமும், நீதி நெறியும் மக்கள் நல்வாழ்க்கைக்கு அரணானவை. மனோதத்துவ வேதாந்தப் பொருட்களிலும் அவர்களின் நூல்கள் வியந்து போற்றுதற்குரியது. வேதசரித்திர நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்" என்றார்.
உள்ளூர் மொழியால் மட்டுமே நாம் அறிவிக்கும் கிறிஸ்துவை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும், புரிந்துகொண்ட கிறிஸ்தவ சத்தியத்தை அவர்கள் மொழியிலேயே வேதம் இருக்கவேண்டும் என்பதையும் அறிந்து கொண்ட சீகன்பால்க் வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அத்துடன் தமிழ் மக்களிடையே இருந்த சாதி பிரச்சனை, ஒடுக்குமுறை, கல்வியில்லாமை, அக்கறையின்மை போன்றவற்றால் தமிழ்மக்களின் வளர்ச்சி பெருமளவில் மேல்தட்டு மக்களால் நசுக்கப்பட்டிருந்ததை அறிந்த சீகன் தமிழ் மொழியை மீட்டு அதற்குச் சுதந்திரம் கொடுத்ததால்தான் அது அனைவரையும் சென்றடையும் என்னும் சீரிய நோக்குடன் சீர்த்திருத்தத்தை ஆரம்பிக்க அவரே களம் இறங்கி அழகப்பன் மற்றும் முதலியப்பன் என்ற தமிழ் நண்பர்களின் உதவியோடு தமிழ் மொழியை மணலில் எழுதி 8 மாதங்களில் கற்றார். இலக்கணம் மற்றும் இலக்கியங்களைக் கற்றார். முதன் முதலில் தொல்காப்பியத்தைப் படித்தார். அவரது மொழிபெயர்ப்பாளரான ஆலப்பா என்பவர் மூலம் 5000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவுசெய்து மனப்பாடம் செய்ததில் அவருக்கிருந்த மொழி ஆர்வம் மற்றும் நற்செய்தியின் மேல் அவருக்கிருந்த தாகமும் தெரிந்தது. தமிழ் மொழிக்கு அவர் செய்த சீர்த்திருத்தத்தின் தாக்கம் 300 ஆண்டுகள் கழிந்தும் நாம் பேசுகிறோம். அதன் விளைவை நாம் அனுபவிக்கிறோம். அதன் முழுவிடுதலையை நாடிப்போகிறோம். தமிழ் மொழியின் இலக்கியநடை, ஓலைச்சுவடிகள் வடிவம் மற்றும் கற்றவர் மொழி போன்ற அடிமைத்தனத்திலிருந்து சீகன் எப்படி விடுதலையை ஏற்படுத்தினார் என்பதை காண்போம்.
இலக்கிய நடையிலிருந்து உரைநடைக்கு விடுதலை
உரைநடை என்பது, ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஓர் எழுத்து வடிவம் ஆகும். கவிதைப்போல எதுகை மோனை போன்ற அணிகள் இன்றி, ஆனாலும் அடுக்குமொழிகள் போன்ற கவிதைப்பாங்குடனும் நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். ஊரைநடை பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும் ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் பயன்படுகின்றது. தமிழ் மொழி ஒரு இலக்கிய மொழி. பாடல்கள், கவிதைகள், உருவகங்கள், உவமைகளாக, இருந்த இலக்கியத் தமிழ் மொழியை உரைநடையில் எழுதி எளிமைப்படுத்தி எளியோரும் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றிய பெருமையைப் பெற்றவர் சீகன்பால்க். இவருக்கு முன்பாக ராபர்ட் டி நோபிலி எழுதியிருந்தாலும் அவை சமயச் சார்புடைய வடசொல் கலந்த மேனாட்டு மொழி கலந்த ஒரு கொச்சை மொழியில் இருந்ததால் சீகன்பால்க்கின் உரைநடைத் தமிழ் பெரும்பாலானோரால் ஏற்புடையதாக இருந்தது. அத்துடன் அவைகள் அச்சுக்களில் ஏறாததால் அழிந்துபோயின என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
தமிழ் மொழியில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், நூற்பாக்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் உரைநடைப்பற்றி சொல்லி எழுதப்பட்டிருந்தாலும், அது ஆட்சித்துறை சார்ந்ததாக இருந்ததால் அதனை தமிழ் அறிஞர்கள் இலக்கியத்தில் உரைநடையை ஒரு தனித்த வடிவமாக ஏற்கவும் வளர்க்கவும் இல்லை. ஆகவே இலக்கய நடைகள் சாதாரன மக்களுக்கு இருந்தது. தமிழ், இலக்கியம் எழுத்துத்தமிழாகவும், மேடைத்தமிழாகவும் பேச்சுத்தமிழாகவும் இருந்தால் பேச்சுத்தமிழை மட்டும் அறிந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு மேடைத்தமிழ் மற்றும் எழுத்துத்தமிழை கேட்கவோ, படிக்கவோ மற்றும் எழுதவோ வாய்ப்பில்லாமல் கல்வியறிவு என்பது கானல் நீராக இருந்தது.
இந்நிலையில் உரைநடையில் தமிழை எழுதி எட்டாக்கனியைத் தோவறித்து வாயில் வைத்தாற் போல் செய்த பெருமை சீகன்பால்க்கையே சாரும். உரைத்தல் என்ற சொல்லிலிருந்து உரைநடை என்ற சொல் பிறக்கிறது. உரைநடை பேச்சு வழக்குடன் தொடர்புடையது. ஓலைச்சுவடிகளில் உரைநடையைப் பயன்படுத்தமுடியாததால், இலக்கியத்தில் உரைநடையை அதிகமாகப் பயன்படுத்தவில்லை . பழங்காலத்தில் உரைநடை இலக்கண இலக்கியத்திற்கு உரை எழுதவும், கருத்துரை, பதவுரை, விளக்கவுரை, தெளிவுரை, பொருளுரை போன்று எழுதி, கடினமான வார்த்தை, மற்றும் பதங்களை எளிய முறையில் விளக்கப்பயன்பட்டது
பேனா, பேப்பர், அச்சு சாதனங்கள் வந்தபின்பே உரைநடை பலதுறைகளில் வளர்ச்சியடைந்தது. உரைநடை மொழியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதினார் சீகன்பால்க். தமிழ் மொழியின் கட்டமைப்புக்குறித்த தனது கருத்துக்களைத் தமிழ் எழுத்துகள், அவற்றின் உச்சரிப்பு, பெயர்ச்சொல் ஆகியவற்றிற்காக 4 வேற்றுமைப் பாகுபாடுகளை முன்வைக்கிறார். அவை பண்படை, வினைச்சொற்கள், மொழியின் சொன்றொடரியல் ஆகியவை குறித்து விளக்குகிறார். மேலும் பல்வேறு தொடர்வரிசை அத்தியாயங்களில் மிகச்சாராம்சமான அத்தியாயம் சொற்றொடரியலூடான வினைச்சொற்கள் பற்றிய ஒரு அத்தியாயமாகும். இந்த அத்தியாயத்தை வெறும் 11 பக்கத்தில் மட்டுமே எழுதினார்.
சீகன்பால்க்கின் இலக்கணநூல் ஒரு சிறு எண்ணிக்கையிலான சொல் வடிவங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த சொல் வடிவங்கள் பேச்சு வழக்கானவை என்ற போதிலும் அவர் பேச்சு வழக்கு மொழி குறித்து விளக்கமளிப்பதாக எந்த வகையிலும் குறிப்பிட்டுக் கூறியதில்லை. எனினும் அநேகமாகப் பேச்சு தமிழ் அல்லது பேச்சு வழக்குத் தமிழாக உரிமைக்கோரும் ஏராளமான நூல்கள் கடந்த 200 ஆண்டுகளில் தோன்றியுள்ளன. இந்நூல்களின் வாசகங்களைப் படித்துப் பரிசீலித்ததில் அந்நூல்கள் வழங்கும் தமிழ் வகையானது ஏகமான நவீன எழுத்துத் தமிழ் வகைதான் என்பது தெரியவந்தது என்று ஆர்.இ.ஆஷெர் எழுதியதை ஆர். பெரியசாமி மொழிபெயர்த்திருக்கிறார். சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. அவர், தம்மைச் சுற்றியருந்த சாதாரன மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். உதாரணமாக முடி என்பதற்கு, மயிர் என்கிற பொதுவான வழக்கத் தமிழைப் பயன்படுத்தினார், ஆனால் பெஸ்கி கேசம் என்று பாமரமக்களின் வழக்கத்தில் இல்லாத வார்த்தையைப் பயன்படுத்தினார். அத்துடன் உரோம கத்தோலிக்கர்கள் பயன்படுத்திய சில எளிமையான வார்த்தைகளையும் அப்படியே எடுத்துக்கொண்டாலும், பெஸ்கி, சீகன்பால்க்கின் நடையை ஆதரிக்கவில்லை. கராணம் பெஸ்கியின் தமிழ் இலக்கியநடையாக இருந்தது. அத்துடன் நோபிலி மற்றும் பெஸ்கி போன்றவர்கள் இயேசுவின் சங்கம் என்னும் கற்றவர்களின் பின்ணணியிலிருந்து வந்தவர்கள், மேலும் அவர்களுடைய இலக்காக இருந்தவர்கள் பெரும்பாலும் கற்றவர்களாக இருந்ததால் அவர்கள் பாமரமக்கள் மொழியைக் கற்காமல் மேல்தட்டு மக்கள் மொழிக்கு எற்ப இலக்கியங்களைக் கற்றுப் பல்வேறு இலக்கியங்களை எழுதினார்கள். சீகன் போன்று அடித்தட்டு மக்களுக்கென்று இலக்கியத் தமிழ்மொழியை உரைநடையாக எழுதவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாதிருந்தது.
இன்றும் இலக்கியநடையில் பேசுகிறவர்களுக்கும் உரைநடைத் தமிழ் பேசுகிறவர்களுக்கும் இடையே பெரும் பேதங்கள் இருக்கிறது. ஆனாலும் இன்று இலக்கியநடைத் தமிழைப் பேசுகிறவர்கள் மிகவும் குறைவு, நவீன தமிழ் என்று உரைநடை தமிழைப் பேசுகிற தமிழ் ஆசிரியர்களே அதிகம். வெதசிலரே. ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசுகிறார்கள். குறிப்பாக இலங்கைத் தமிழர்களும் அவர்களை ஆதரிக்கும் தமிழ்ச் சங்கங்கள், க அமைப்புகளும் தூயத்தமிழைப் பேசுவதில் பெருமைக்கொள்கிறார்கள். அதனை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தமிழ் வாழ்க என்போரும், தமிழ் ஆசிரியராகவோ பேராசிரியராகவோ இருந்துகொண்டு தன் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் படிக்கவைக்கும் முறண்பாட்டாளர்கள் மத்தியில் ஜெர்மன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சீகன்பால்க் தமிழ் மொழியின் அருமையை அறிந்து அதனை விரைவில் கற்று, அதனை எளிமைப்படுத்தியும் அதன் மூலம் மொழிபெயர்ப்புகள் பல செய்தும், பல இலக்கணம் மற்றும் அகராதி நூல்கள் எழுதி இலக்கியநடை மொழியை உரைநடை மொழியாக மாற்றி இன்று அநேகர் உரைநடையில் பயிலவும் எழுதவும் பயிற்றுவிக்கவும் அடித்தளமிட்ட சீகன்பால்க்கின் சீரிய சீர்த்திருத்தப்பணி ஒரு மொழி விடுதலைப்பணியாகும் என்றால் அது மிகையாகாது.
ஓலையில் ஒடுங்கியிருந்ததிலிருந்து காகிதத்திற்கு விடுதலை
அக்காலத்தில் தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் ஓலையில் எழுதப்பட்டிருந்தன. பண ஓலையில் எழுதப்படுவதற்கு அந்த ஓலை அதிக ஈரமாகவோ அல்லது அதிகம் காய்ந்ததாகவோ இருக்கக்கூடாது. அத்துடன் அதில் மஞ்சள் அளவாக, பதமாகத்தடவி பதப்படுத்தவேண்டும். ஓலையில் புள்ளி எழுத்துக்களை எழுதமுடியாது. காரணம், ஓலையை எழுத்தாணி கொண்டே எழுதவேண்டும். பெரும்பாலும் தமிழ் மொழி ஓலைச்சுவடிகளே அதிகம். சமஸ்கிரத ஓலைச்சுவடிகள் பெரிதும் இல்லை. ஆனாலும் இந்த ஓலைச்சுவடிகளில் உள்ள இலக்கியங்கள் மேல்குடி மக்கள், அந்தணர்கள் என்று அழைக்கப்படுகிற பிராமணர்களிடமும் அரசவையின் ஆய்வுக்கூடத்திலேதான் அதிகம் இருக்கும். இந்த ஓலைச்சுவடிகளைப் பாமரர்கள் பார்ப்பதே அரிது, அவர்களுக்கு அதைப்படிக்கவும் எழுதவும் வாய்ப்பில்லை . ஆகவே ஓலைச்சுவடிகளின் உள்ள இலக்கியங்கள் ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களுக்குக் கிடைக்கப்பெறாதவைகள் பெரும்பாலான ஓலைச்சுவடிகள் வானவியல், ஜோதிடம், எண்கணிதம் போன்றவற்றை உடையதால் அதை யாருக்கும் கொடுக்கமாட்டார்கள் என தமிழ் அறிஞர்கள் கருதுகிறன்றனர்.
சீகன்பால்க் போன்ற மிஷனெரிகள் ஓலைகளிலேயே வேதத்தையோ அல்லது முதன் முதலில் அச்சிட்டு வெளிவந்த விசுவாசப்பிரமாணம் மற்றும் பத்துக் கட்டளைகளையோ எழுதியிருந்தால் அது எளிய மக்களைச் சென்றடைந்திருக்காது. எப்படி சீர்த்திருத்தத் திருச்சபை உருவாவதற்கு முன் வேதாகமம் சங்கிலியால் கத்தோலிக்க போப் ஆண்டவர் மூலம் கட்டப்பட்டு, இறையியல் மாணவர்கள் மாத்திரம் படிக்கும் நிலை இருந்ததோ அதைப்போன்று இந்தியாவில் ஓலையில் உள்ள வேதாகமம் அந்தணர்கள் மட்டும் படிப்பதற்கு மட்டுமே இருந்திருக்கும். கிறிஸ்தவ சத்தியம் ஒரு கூட்டத்தாருக்கு மட்டுமே சென்று அவர்களிடம் அடிமைப்பட்டிருக்கும். சீகன் பால்க் வேதத்தைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து, அதனை காகிதத்தில் அச்சிட்டதால் இயேசுவின் பாதனைகள் மட்டுமல்ல தமிழ்மொழியும் ஓலையிலிருந்து காகிதத்தத்திற்கு விடுவிக்கப்பட்டது. ஓலையிலிருந்து காகிதத்திற்குத் தமிழைக் கொண்டுசெல்ல சீகன்பால்க் பட்ட கஷ்டம் அதிகம். குறிப்பாக அந்நாட்களில் அநேக ஓலைச்சுவடிகள் அனல் வாதம் மற்றும் புனல் வாதம் மூலம் அழிக்கப்பட்டன என்றும் அவற்றுள் எதிர்நீச்சல் போட்டு கரையை அடைந்தவை மட்டுமே சிறந்தன என்பதை மணோன்மனியம் சுந்தரம்பிள்ளை கூறுகிறார். இவற்றில் எதிர்நீச்சல் போட்டு வென்று வந்த இலக்கியங்களில் ஒன்றாக உலகப்பொதுமறையான திருக்குறளைக் கருதமுடியும். ஆனால் இன்று சீகன்பால்க்கின் வழி தமிழை அழிக்கமுடியாத நிலைக்கு தமிழ் உயர்ந்திருகிறது. அதற்கு மூலக்காரணமாக அமைந்தது அச்சு வடிவில் காகிதத்தில் அன்று வெளியிடப்பட்ட இலக்கியங்களாகும்.
வேதாகமம் அவரவர் மொழியில் இருக்கவேண்டும் என்பதால்தான் இயேசுவின் காலத்தில் கூட ரோமர்கள் ஆட்சிக்கு கீழ் அடிமைப்பட்டு அக்காலத்தில் பிறந்து வளர்ந்த யூதர்கள், வேதத்தைப் புரிந்துகொள்வேண்டும் என்னும் உயரிய நோக்கில் அவர்களுடைய வேதத்தை (பழைய ஏற்பாட்டை) எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழிபெயர்த்தனர். ஆனால் கத்தோலிக்கர்கள் வேதத்தை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்காமல் அதனை கட்டிப்போட்டிருந்தார்கள். அதனை எதிர்த்து உருவான சீர்த்திருத்த சபையிலிருந்து மிஷனெரியாக வந்த சீகன் பால்க் இயேசுவின் வாழ்வையும் அவருடைய போதனைகளையும் அறியாமல் புதிய விசுவாசிகள் பின்வாங்கிப் போகாதிருக்கவும், கிறிஸ்துவின் போதனையில் அவர்கள் நிலைத்திருக்கவும், அவர்கள் மொழியில் வேதம் இருக்கவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து, ஸ்கிமிட்டின் கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழி பெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் 1708, அக்டோபர் 17ல் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி, 1711 மார்ச் 31அன்று முடித்தார். பல்வேறு இன்னல்களுக்கிடையே 1713ல் அச்சில் ஏற்றி, 1715, ஜூலை 15ம் தேதி அன்று இந்திய வரலாற்றில் முதன் முதலில் தமிழ் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இதனால் இன்று வேதமும் தமிழ்மொழி உரைநடை மற்றும் பல்வேறு இலக்கிய நடையும் காகிதத்தில் வெளிவருகிறது. எளிய முறையில், ஏழைகளுக்கும் கிடைக்கும்வகையில் காகிதத்தில் தமிழில் அனைத்துவகை பாடங்களும் கிடைக்கப்பெறுகிறது. அத்துடன் இன்று உலக மொழிகளிலேயே இரண்டாவதாக, கணிணியில் தமிழ்தான் இருக்கிறது. இந்த அளவு நவீன வடிவில் தமிழ் வளர்வதற்கு அஸ்திபாரமாக இருந்தது உரைநடையும் அதனைத் தொடர்ந்து அவைகள் காகிதத்தில் அச்சிட்டு வெளிவந்ததுமேயாகும்.
இதே ஆண்டில் அவர் தனது பிறந்த நாட்டிற்குச் சென்றபோது, மலையப்பன் என்ற இளைஞரை அழைத்துச்சென்று, கப்பலிலேயே பழைய எற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழிப்பெயர்ப்பு செய்தார். கிறிஸ்துவின் மேல் உள்ள இவரது பற்றும் தமிழ் மக்களைக் கிறிஸ்துவுக்கு சீடராக்கவேண்டும் என்கிற இவரது தனியாத தாகமும் இம்மொழி விடுதலைக்கு வித்திட்டது. 1716ம் ஆண்டு தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவி, வேதம் ஒரு தரப்பினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினருக்கும் உரியது என்பதை உறுதிசெய்தார். இன்றும் உரோம கத்தோலிக்க சபையின் தலைவர் போப் ஒரே இனத்தை சார்ந்தவராகவே இருப்பது போல இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே வேதத்தைப் படிக்கவும் போதிக்கவும் தகுதியானவர்கள் என்று இருந்த நிலையை மாற்றி தாழ்த்தப்பட்ட இனத்தாரும் வேதத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கிறிஸ்துவின் அதிகாரம் பெற்றவர்கள் என்பதை மொழ விடுதலைப்பணி மூலம் எடுத்துரைத்தார்.
அந்தணர்களின் அடிமையாயிருந்ததிலிருந்து பாமரர்களுக்கு விடுதலை
தமிழ் மொழி மிகவும் கடினமான மொழிகளில் ஒன்று. அதற்குப் பல காரணங்கள் உண்டு, இம்மொழியில் உயிர் எழுத்துக்கள் 12ம் மெய்யெழுத்துக்கள் 18ம் உயிர்மெய் எழுத்துக்கள் 216ம், ஒரு ஆயுத எழுத்துடன் சேர்த்து 247 எழுத்துக்கள் உள்ளன. இத்தனை எழுத்துக்களை மனப்பாடம் செய்வதும், அதனைச் சரியாகப் பயன்படுத்திப்படிப்பதும், எழுதுவதும் கடினம். இதனால், தமிழ் மொழியைத் தமிழர்கள் படிப்பதே கடினமாக இருக்கும். பாமரர்கள் தமிழ் பேசினாலும் அந்தணர்களின் தமிழ் மொழியிலிருந்து முற்றிலும் இன்றுவரை வேறுபட்டிருக்கிறது. பெஸ்கி மதுரையில் உள்ள ஒரு பிராமணரிடம் தமிழ் கற்றதால் அவருடைய மொழி வேறுபட்டிருந்தது, ஆனால் சீகன் பாமரமக்களிடம் அவர்களில் ஒருவராக இருந்து, தம்மைத் தாழ்த்தித் தமிழ்ப் பயின்றார். மரியாள் மற்றும் யோசேப்பைப் பற்றித் தேம்பாவணி போன்ற இலக்கியங்களை எழுதியிருக்கிறார் பெஸ்கி. ஆனால் அதைவிட மேன்மையாகத் தமிழில் வேதம் அவசியம் என்பதை சீகன் உணர்ந்தார். ஆகவே அவருடைய மொழி பாமரமக்களுக்கு ஏற்றதாயிருந்தது. சிலவார்த்தைகளின் ஓசையையும் அதன் வடிவத்தையும் மாற்றி, ஒவ்வொரு குலத்திற்கு, இனத்திற்கு ஏற்றார்போல மனிதர்களுக்குப் பெயரிடுதல் இருந்ததை, பாமரமக்களுக்கு ஏற்றார்போல் புதிய பெயர்களைக் கொடுத்துத் தமிழ்மொழி மூலம் சமூகவிடுதலையைக் கொண்டுவந்தார் சீகன் என்பதை அறியமுடிகிறது
வழித்தோன்றலை உருவாக்காதவர்கள் சிறந்த தலைவர்களாவதில்லை. சீகன்பால்க் அநேக வழித்தோன்றல்களை உருவாக்கினார். அத்துடன் வழித்தோன்றல்கள் உருவாவதற்கு ஏற்ப பல நூல்களை எழுதினார். ஜெர்மனியர்கள் அவருக்குப்பின்பு தமிழகத்திற்கு மிஷனெரியாக வருவதற்கு ஏற்ப தென் இந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்கவழக்கங்கள், ஆசாரங்கள். இலக்கியங்கள், பாடல்கள், ஆகியவற்றை ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்களைக் கொண்டு 332 பக்கங்களில் எழுதினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் எழுதினார். தமிழ் - ஜெர்ம சீகன் எழுதினார். தமிழ்நாட்டுத் தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். தமிழ் இராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப்பற்றிச் சிறிய வினா - விடை புத்தகத்தையும் எழுதினார். இவர் படித்த 161 தமிழ் நூல்களைக் கணக்கிட்டுக் காட்டியுள்ளார் என்கிறார் மீனாட்சிசுந்தரம், அதாவது அவர் படித்த புத்தகங்களை மீள்பார்வை அந்த புத்தகங்கள் என்ன சொல்கிறது என்பதைப்பற்றி எழுதியிருக்கிறார். நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி என்ற புத்தகங்களையும் ஒன்று சோத்து 'நானாவித நூல்கள்' என்ற புத்தகத்தையும் எழுதினார். கடவுள், மனிதன், சமயம், பண்பாடு போன்ற தலைப்புகளில் அவரது நூல்கள் இருந்தன. நாள்காட்டியை உருவாக்கியிருக்கிறார் சீகன்பால்க். இவருக்குப் பின்பு தமிழகம் வந்த இராபர்ட் கால்ட்வெல், ஜி.யு. போப், எல்லிஸ் போன்றவர்கள் தமிழ்த்தொண்டை இன்னும் சிறப்பாகச் செய்ய சீகன்பால்க் அடித்தளம் அமைத்தார் என்றால் அது மிகையாகாது.
சீகன்பால்க் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனியே பள்ளிகளை ஆரம்பித்தார். திண்ணைப்பள்ளியின் மாதிரியைப் பின்பற்றிப் பாடத்திட்டங்களையும், பாடப்புத்தகங்களையும் எழுதினார். இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி கனவாக இல்லாமல்
நினைவாக மாறியது. அனைவருக்கும் கல்வி என்ற அவர் விதைத்த விதை இன்று ஆலமரமாக வளர்ந்து ஆயிரம் காலத்துப்பயிராக வளர்கிறது. தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள காலமும், செலவும் அன்று அதிகம், ஆனால் சீகன்பால்க் மூலம் இன்று எளிமையாகவும், செலவு இல்லாமலும் மாறியிருக்கிறது. தமிழ் மொழியில் புள்ளியிட்டு வாக்கியங்களை வேறுபடுத்திக் காட்டுவதில்லை. சொற்களை ஒன்றிலிருந்து ஒன்றை பிரிப்பதில்லை, எல்லா சொற்களும் ஒன்றைப்போலவே இருப்பதால் அதை ஓலைச்சுவடிகளிலிருந்து ஒரு ஆசான் இல்லாமல் படிப்பது கடினம். ஓலைச்சுவடிகளை நகல் எடுப்பது கடினம், ஆனால் இன்று காகிதத்தில் உள்ள செய்திகளை எளிதில் நகல் எடுத்து ஏழைகளும் பயன்படுத்தலாம். தமிழ் மொழியை முறையாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற அவசியத்தை ஒடுக்கப்பட்ட மக்களும் பெற்றுக்கொண்டு சமூக, சமய மற்றும் அரசியல் விடுதலை பெற சீகன் பால்க் உதவினார் என்றால் மிகையாகாது.
முடிவுரை
சீகன்பால்க் இந்தியா வந்த காலத்தில் தமிழ்மொழியைக் கார்மேகம் சூழ்ந்திருந்தது. தமிழ் மொழி இலக்கியம் தேக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அதனால் தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், சமுதாயம் என்று அனைத்தும் வளர்ச்சியில் குன்றிப்போயிருந்தது என்கிறார் மீனாட்சிசுந்தரம், சீகன்பால்க் போன்ற கிறிஸ்தவ மிஷனெரிகளின் வரவால் ஒளியேற்றப்பட்டு தமிழ் மொழி இருளிலிருந்து விடுவிக்கப்பட்டது. வடமொழியின் துணையின்றி தமிழ்மொழியால் தனித்து இயங்கமுடியாது என்ற கூற்றைப் பொய்யாக்கியவர் சீகன்பால்க் ஆவர். தமிழ்மொழியின் தனித்துவத்தையும் அதன் பொக்கிஷமான இலக்கியங்களைத் தமிழர்கள் மட்டுமல்ல மேலை நாட்டவர்களும் அறியும்படி அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு அடித்தளமாக இருந்தவர் சீகன்பால்க். இவரது முயற்சியால் அழிந்துபோகவிருந்த பல்வேறு ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஜெர்மன் இலக்கியநடையான உரைநடை முறையில் நிறுத்தல் குறிகளோடு எழுதப்பட்டு பதிப்பிக்கப்பட்டு அச்சிடப்பட்டன. இவருடைய மொழி விடுதலைப் பணியால் உரைநடை இலக்கியத்துக்குப் புதிய உந்து சக்தி கிடைத்தது. நிலவியல், அறிவியல், வரலாறு, சிறுகதைகள், முதலிய துறைகள் தமிழில் இடம் பெற்றன. இன்றைய நவீன காலத்தில் உள்ள பத்திரிக்கைகள், வார மற்றும் நாளிதழ்கள் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது சீகனின் தமிழ் விடுதலைப்பணியாகும். பல்வேறு நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ஒரு நூலாக்கி வகுப்பறையில் பயன்படுத்தும் முறை இவர்மூலம் அறிமுகமானது.
வை.கோ போன்றோர் கிறிஸ்தவத்தையும் தமிழையும் பிரிக்கமுடியாது என்கிறார்கள். இந்துக்கள் சமஸ்கிரதத்திலும், இஸ்லாமியர்கள் அரபிய மொழியிலும் கடவுளை ஆராதிக்கிறார்கள், ஆனால் கிறிஸ்தவர்கள், மாத்திரமே தமிழில் கடவுளை ஆராதிக்கிறார்கள், ஆகவே கிறிஸ்தவர்களை எனக்குப் பிடிக்கும் என்று சீமான் என்னிடம் சொன்னார். உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்ற உண்மையை உலகிற்குச் சொன்னவர் தேவநேய பாவாணர். தமிழுக்கு இணையான மொழி வேறு இல்லையென்று மிஷனெரிகள் பலர் சொன்னார்கள். 'உலகமெங்கும் தமிழைக் கொண்டுசென்றது கிறிஸ்தவம் - அவர்களில் பலர் மதத்தைப் பரப்புவதற்குப் பதில் மொழியைப் பரப்பினார்கள், மற்ற இலக்கியங்களைப் படித்தார்கள், அதனையும் பரப்பினார்கள்' என்கிறார் சுபவீரபாண்டியன். அச்சு வரவில்லை என்றால் சங்க இலக்கியங்கள் அனைத்தும் காணாமல் போயிருக்கும், திருக்குறள் காணாமல் போயிருக்கும், பைபிள் வந்திருக்காது, கிறிஸ்தவம் வளர்ந்திருக்காது என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். சீகன்பால்க்கின் அருட்பணியை இந்திய அரசாங்கம் அங்கீகரித்து 2006ம் ஆண்டில் அவருடைய 300வது ஆண்டு நினைவுநாளை கொண்டாடும் விதமாக தபால் தலை ஒன்றை வெளியிட்டுப் புகழாரம் சூட்டியது
தமிழ்ப் பண்பாடு தழைக்கவேண்டுமானல் அதன் இலக்கியம் புறக்கணிக்கப்படக்கூடாது, இலக்கியம் பாதுகாக்கப்படவேண்டுமானால் அது அனைத்து மக்களையும் சென்றடையவேண்டும். அதற்கு மொழி பரிமாற்றம் அவசியம். அப்பரிமாற்றத்தைத் தமிழ், இலத்தீன், ஜெர்மன் போன்ற மொழிகளிடையே ஏற்படுத்தியவர் சீகன்பால்க். தமிழகத்தில் தமிழ் உரைநடை தந்தையெனச் சிறப்பிக்கப்படும் ஆறுமுக நாவலரும், தாண்டவராய முதலியாரும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஆணிவேராக இருந்தவர் சீகன்பால்க் ஆவார். சீகன்பால்க் போன்ற தமிழ் பற்றாளர்கள் தமிழ் இலக்கியங்களின் உச்சத்தைத்தொடாமல், அவர்கள் சென்ற உயரத்திற்கு அப்பால் அவர்கள் செல்லவில்லை. அத்துடன் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் அதையே போதும் என்றிருந்தவர்கள் அநேகர். கால்டுவெல் மற்றும் ஜி.யு.போப் போன்ற சிலர் திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்களின் உச்சத்தைத் தொட்டு அதனைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து ஊரே அறியாத திருக்குறளை உலகறியச் செய்ய வித்திட்டது சீகன்பால்க் போன்ற முன்னோடிகளின் அருந்தொண்டாகும்.
Comments
Post a Comment