இரண்டு குடும்பங்கள்

இரண்டு குடும்பங்கள் 

நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். - (லூக்கா 17:26-30).

மேற்கண்ட வசனங்களில் இரண்டு பழைய ஏற்பாட்டு நீதிமான்களை குறித்து காண்கிறோம். இயேசுகிறிஸ்து வரப்போகும் இந்த கடைசி நாட்களில் இந்த நீதிமான்களின் நாட்களில் நடந்ததுப்போல நடக்கும் என்று வேதம் எச்சரிக்கிறது. இந்த இரண்டு நீதிமான்களும் குடும்பங்களை உடையவர்களாயிருந்தார்கள். இவர்கள் குடும்பங்களிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடத்தை இந்த நாளில் கற்று கொள்வோம்.

முதலாவது நோவா அவர் காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்டது என்று நாம் அறிவோம். 'பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்' (ஆதியாகமம் 6:11). அப்படிப்பட்ட கொடிதான காலத்தில் 'நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்' (9ம் வசனம்). நோவாவிற்கு மூன்று குமாரர் இருந்தார்கள். அவர் தன் குடும்பத்தை தேவ பயத்திற்குள்; நடத்த அறிந்திருந்தார். அவர் தன் மனைவியிடமும், தன் பிள்ளைகளிடமும் 'தேவன் இந்த உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்கபோகிறார்' என்று சொன்னபோது, அவர்கள் பரிகசிக்காமலும், கேலி செய்யாமலும் தங்கள் தகப்பனோடு சேர்ந்து, பேழையை கட்ட ஆரம்பித்தனர். அவருடைய மனைவி அவரோடு இணைந்து, அந்த பேழையை கட்ட உதவி செய்தாள். பேழையை கட்டி முடித்தபோது, நோவா தன் மனைவியையும், மகன்களையும், அவர்களின் மனைவிகளையும், அழைத்து, மொத்தம் எட்டு பேராக அந்த பேழைக்குள் பிரவேசித்தார்கள். அந்த உலக சரித்திரத்திலேயே மிகப்பெரிய ஜலப்பிரளயம் வந்தபோது, நோவாவும் அவன் குடும்பமும் எட்டுபேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள். விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். -(எபிரேயர் 11:7).

இந்த நாட்களிலும், எந்த தகப்பன் தன் குடும்பத்தை கர்த்தருக்குள் நடத்தவும், கர்த்தருக்கு பயந்து, இந்த கொடிய பொல்லாத உலகத்தினால் கறைபடாதபடி தன் குடும்பத்தை பாதுகாக்கிறானோ, அவனுடைய குடும்பமும் நோவாவின் குடும்பம் காக்கப்பட்து போல காக்கப்படும். நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

மற்றொரு குடும்பம் லோத்தின் குடும்பம், அவரும் நீதிமானாயிருந்தார். ஆனால் எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள விசுவாசிகளின் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. சோதோம் கொமாரா என்னும் பட்டணத்தில் வசித்த அவன், அந்த தேசத்து மக்கள் செய்யும் கொடிய பாவமான காரியங்களை 'நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க' (2பேதுரு 2:8) (அவருடைய குடும்பத்தை அல்ல). லோத்து தன் குடும்பத்தை கர்த்தருடைய வழியில் சரியான முறையில் நடத்தவில்லை. ஆகையால், தூதர்கள் வந்து அவனை சீக்கிரமாய் இந்த தேசத்தை விட்டு போ என்று துரிதப்படுத்தினாலும், அவர்கள் தாமதித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த தேசத்தை விட்டு போக மனதில்லாதிருந்தது. 'அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்' (ஆதியாகமம் 19:16). தேவனுடைய இரக்கத்தினாலே தூதர்கள் அந்த குடும்பத்தை பிடித்து இழுத்து கொண்டு போய் வெளியே விட்டார்கள். அப்படி விட்டும், கணவனாகிய லோத்து கண்டிப்பாக திரும்பி பார்க்க வேண்டாம் என்று சொல்லியும், திரும்பி பார்த்து உப்புத்தூணாய் மாறிப் போனாள் அவருடைய அன்பு மனைவி! அத்தனை கீழ்ப்படிதல் அந்த பெண்ணிற்க்கு! அத்தனை உலக பற்று! உலகத்தை விட்டு வர முடியாதபடி அவள் இருதயம் முழுவதும் உலகத்தின் மேல் இருந்தபடியால், கணவன் சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லை. லோத்து அவரது பெண்பிள்ளைகளின் மருமக்கள்மாரிடம் போய் தேவன் இந்த தேசத்தை அக்கினியால் அழிக்கப்போகிறார் என்று பேசி அவர்களை காப்பாற்ற எண்ணினபோது, அவர் சொன்ன காரியம் அவர்களுக்கு பரியாசம் பண்ணுகிறதை போல இருந்தது. அவர்கள் லோத்தின் குடும்பத்தோடு சென்று, வரும் கோபத்திற்கு தப்பித்து கொள்ள கவலைப்படவில்லை!

லோத்து தன் பிள்ளைகளையும் சரியாக வளர்க்காததால், தங்கள் தகப்பனுக்கு குடிக்க கொடுத்து, இருவரும் அவரோடு சயனித்து, தங்கள் தகப்பன் என்றும் நினையாதபடி, கொடிய பாவத்தை செய்தார்கள். அதன் மூலம் பிள்ளைகளையும் பெற்று, தேவன் தெரிந்து கொண்ட ஜனத்திற்கு விரோதமாக எப்பொழுதும் எதிர்த்து நிற்கும் சந்ததியாக அந்த பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் நீதிமானாயிருந்தும், தன் குடும்பத்தை சரியாக நடத்தாதபடியால், முழு குடும்பமும் கெட்டுபோக காரணமாயிருந்தான். நோவா தன் குடும்பத்தை சரியாக நடத்தினபடியால், குடும்பமாய் தேவ கோபத்திற்கு தப்பினார்கள். ஆனால் லோத்தின் குடும்பமோ தாறுமாறாக போனது.


இந்த நாளில் நம் குடும்பம் எப்படி இருக்கிறது என்று யோசித்து பார்ப்போம். நோவாவின் குடுபத்தை போலவா? லோத்தின் குடும்பத்தை போலவா? இரண்டு குடும்பத்தை போலவும் கடைசி நாட்களில் இருக்கும் என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை தேவன் நம்முடைய கரத்தில்தான் கொடுத்திருக்கிறார். வரும் காலம் மிக கொடிய காலங்களாக இருக்க போகிறது. நம் குடும்பத்தை காக்க வேண்டிய கடமை நம்மிடத்தில் தான் இருக்கிறது, கர்த்தர் விரும்பும் குடும்பங்களாக, ஆபத்து நாளிலே காக்கப்படும் குடும்பங்களாக நம் ஒவ்வொருவரின் குடும்பங்களும் இருக்க தேவன் தாமே கிருபை செய்வாராக!

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?