கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். - (ரோமர் 12:6-8).
பீத்தோவன் ( Beethoven ) என்னும் புகழ்பெற்ற இசை நிபுணர் தன்னுடைய செவிட்டு குறையினால் மற்றவர்களோடு அதிகமாக பேச மாட்டார். காது கேளாதததினால் அவருக்கு பேசுவதும் கடினம். ஓரு முறை தன் நண்பனின் மகன் இறந்த செய்தியை கேட்டு அவர் மிகவும் வருத்தப்பட்டவராய், நண்பனின் வீட்டிற்கு சென்றார். அவருக்கு எந்த வார்த்தைகள் சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை.
ஏனெனில் அவருக்கு பேசுவது கடினமானதினால். அப்போது அவர் அங்கு மூலையில் இருந்த ஒரு பியானோவை பார்த்தார். உடனே அங்கு சென்று அமர்ந்து, ஒரு அரை மணிநேரம் தன் இருதயத்தின் வியாகுலங்களையெல்லாம், துயரத்தையெல்லாம் அதில் கொட்டி வாசித்து முடித்தார். அதை வாசித்து முடித்து. அவர் அந்த இடத்தை விட்டு சென்றார். பின் அவரது நண்பர், மற்ற யாரை பார்க்கிலும் பீத்தோவனின் வருகை தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது என்று கூறினார்.
நம்மிலும் நாம் யாரும் மற்றவர்களை போல இருப்பதில்லை. நாம் மற்றவர்களை போல இருக்க முயற்சித்தாலும் அது கடினமே. ஆனால் தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆற்றலையும், தாலந்துகளையும் கொடுத்துள்ளார். மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில் ஆறு வகையான தாலந்துகளை நாம் பார்க்கிறோம்.
அதில் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். ஊழியம் செய்வதில் நாம் வாஞ்சை உள்ளவர்களாயிருந்தால் அதிலும், பகிர்ந்து கொடுப்பதில் நாம் வாஞ்சை உள்ளவர்களாயிருந்தால் அதிலும், இரக்கம் உடையவர்களாயிருந்தால்,மற்றவர்களுக்கு அவர்களுடைய தேவைகளில் இரக்கத்துடன் இருப்பதிலும் நாம் முந்தி கொள்ள வேண்டும்.
பீத்தோவன் தன்னால் இயன்றதை தன் நண்பனுக்கு செய்து, அவருக்கு ஆறுதலை கொடுத்ததை போல நாமும் நம்மால் இயன்றதை செய்து, தேவனுடைய ராஜ்யத்தை கட்ட வேண்டும். அதற்கென்றே தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கிருபாவரங்களை கொடுத்திருக்கிறார். அவற்றை பெற்று கொண்ட நாம் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க கூடாது.
தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக நாம் ஒவ்வொருவரும் எதையாவது செய்யவே வேண்டும். கர்த்தருடைய வருகை மிக சமீபமாய் இருப்பதால் நாம் இன்னும் இந்த உலகத்தவர்களை போல வாழ்ந்து, நம்முடைய திருப்திக்காகவே இருக்க கூடாது. எழுந்துகட்டுவோம் வாருங்கள், தேவ ராஜ்ஜியம் எழும்பட்டும்.
Comments
Post a Comment