உம்மண்டை கர்த்தரேநான் சேரட்டும்

உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்

12-5-1889 அன்று இங்கிலாந்தில் உள்ள ஜான்ஸ்டன் பட்டணம் மிகுந்த வெள்ளப்பெருக்கினால் சூழப்பட்டது. அங்கு ஒரு வண்டி சுழல் நீரில் சிக்கி தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. அவ்வண்டியில் கவிழ்ந்து கிடந்த ஒரு பெட்டிக்குள் ஒரு இளம் பெண் சிக்கிக் கொண்டிருந்தாள். அவள் தூர கிழக்கு நாடுகளுக்கு மிஷனரியாக செல்ல தன்னை அற்பணித்து அப்பயணத்தை மேற்கொண்டவள். கரையிலிருந்து உதவி எதுவும் செய்ய முடியாமல் தவித்த மக்களை அமைதியாக பார்த்தாள். ஒரு ஜெபம் பண்ணி விட்டு இப்பாடலை எந்தவித கலக்கமின்றி பாட ஆரம்பித்தாள். கரையிலிருந்த அனைவரும் கண்ணீர் மல்க அவளோடு பாடலில் இணைந்தார்கள். பாடிக்கொண்டிருக்கும் போதே அவள் ஆண்டவரின் சந்நிதியை சென்றடைந்தாள்.  

1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் இங்கிலாந்து தேசம் எங்கும் ஒரே கோலாகலம். ஊரெங்கும் புதிதாய் பயணத்தை துவங்கப்போகும் அந்த அதிநவீன சொகுசு கப்பலை பற்றிய பேச்சு தான்.

டைட்டானிக் என்ற அந்த உலகிலேயே மிக பெரிதும் பிரமாண்டமுமான சொகுசு கப்பல். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்துக்கொண்டு இங்கிலாந்திலுள்ள சௌதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்கா செல்ல தயாராகி நின்றது. இக்கப்பலை மூழ்கடிக்க சாத்தியமே இல்லை என்று வடிவமைத்தவர்கள் கூறினர்.

தன் முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் சமுத்திர பனிக்கட்டியில் மோதி மூழ்க ஆரம்பித்தது. உயிர் காக்கும் சாதனங்கள் போதிய அளவு இல்லை. எனவே மரணத்தை எதிர் நோக்கி இருந்த 2000 மேற்பட்ட பயணிகளின் மன அமைதியை காக்க கப்பலின் இசைக் குழு இப்பாடலை இசைக்க ஆரம்பித்தது. அனைவரும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ச்சி பொங்க இப்பாடலை பாடினர். மூன்று மணி நேரத்தினுள் அதில் 1500 பேர் உறைய வைக்கும் குளிர்ந்த சமுத்திர நீரில் மூழ்கி மரித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே இதை தனக்கு விருப்பமான பாடல் என்று கூறிவந்தார். 1901 ஆம் ஆண்டு அவர் சுட்டுக்கொல்லப் பட்டபோது உயிர் பிரியும் முன் அவர் முனுமுனுத்த வார்த்தைகள் இப்பாடலே. பின்னர் அவரது அடக்க ஆராதனையிலும், ஞாபகார்த்த ஆராதனையிலும் அமெரிக்கா முழுவதும் இப் பாடல் பாடப்பட்டது. 

துயரமான தருணங்களில் பல தரப்பட்ட மக்களுக்கு ஆறுதல் பெற பாடப்பெற்ற புகழ் மிக்க பாடலை எழுதியவர் சாரா_பிளவர்_ஆடம்ஸ் (Sarah Fuller Flower Adams) என்ற ஒரு பெண்மணி.

22-2-1805 அன்று இங்கிலாந்தில் உள்ள ஹார்லோவில் பெஞ்சமின் (Benjamin) என்ற "கேம்பிரிஜ் இன்டெலிஜென்சர்" என்ற வாராந்திர புரட்சி பத்திரிக்கை நிருபரின் மகளாக பிறந்தார்.

இளம் வயதிலேயே அனைத்து தாலந்தையும் பெற்றிருந்தார். தனது திருச்சபையின் செய்தி மலரில் பல கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுவார். இவர் ஒரு சிறந்த அழகி. நடிப்பதிலும் திறமை மிக்கவர். 1834 ம் ஆண்டு ஜான் பிரிட்ஜஸ் ஆடம்ஸ் என்ற பொறியியல் வல்லுனரை திருமணம்செய்து கொண்டார். இவரது தாலந்தையும் ஆர்வத்தையும் கண்ட கணவன் இவரை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தினார். 1837 ல் லண்டனில் உள்ள ரிச்சர்ட்டு (Richard) கலையரங்கில் மாக்பெத் சீமாட்டியாக நடித்தார். உடல் நிலை பெலவீனத்தால் நடிப்பதை விட்டுவிட்டு எழுத்து பணியில் கவனத்தை திருப்பினார்.

சாராவின் சகோதரி எலிசபெத் (Elizabeth) இசை அமைப்பதில் வல்லவர் . ஒரு நாள் போதகா் பாக்ஸ் யாக்கோபு (Jacob) பெத்தேல் (Bethel) அனுபவத்தை பற்றி ஒரு செய்தியை தயாரித்தார். இச்செய்தியின் நிறைவில் ஒரு பாடல் இருந்தால் நலமாக இருக்கும் என்று இச்சகோதரிகளிடம் கூறினார். சாராள் பாடலை எழுத எலிசபெத் (Elizaberth) அதற்கு ராகம் அமைத்தார். இப்புத்தகம் 1841 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் 1844 ஆம் ஆண்டு இப் பாடல் அறிமுகமானது. ஆயினும் பிரபலமாகவில்லை. 12 ஆண்டுக்கு பிறகு " அமெரிக்க ஆலய இசைத் தந்தை" என்று அழைக்கப்படும் #லோவன்_மேசன் "பெத்தானியா" என்ற அருமையான ராகத்தை இப்பாடலுக்கு கொடுத்தார். இந்த ராகம் இப்பாடலை உலகப் புகழ் பெற்றதாக மாற்றிவிட்டது. 

எலிசபெத் (Elizabeth) 1846 ஆம் ஆண்டு எலும்புருக்கி நோயால் மரித்தார். அவளது மரணப் படுக்கையில் உதவி செய்த சாராவும் இரண்டு ஆண்டுக்குள் தனது 43 ஆம் வயதிலேயே மரித்தார்.

உம்மண்டை கர்த்தரே
நான் சேரட்டும்
சிலுவை சுமந்து
நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை கர்த்தரே (2)
நான் சேர்வதே

தாசன் யாக்கோபைப் போல்
ராக்காலத்தில்
திக்கற்று கல்லின் மேல் 
தூங்குகையில்  
எந்தன் கனாவிலே
உம்மண்டை கர்த்தரே (2)
இருப்பேனே

நீர் என்னை நடத்தும் 
பாதை எல்லாம் 
விண் எட்டும் ஏணி போல் 
விளங்குமாம் 
தூதர் அழைப்பாரே
உம்மண்டை கர்த்தரே (2)
நான் சேரவே

விழித்து உம்மையே
நான் துதிப்பேன்
என் துயர் கல் உம்
வீடாக்குவேன் 
என் துன்பத்தாலுமே
உம்மண்டை கர்த்தரே (2)
நான் சேர்வேனே.

சாராள் பிளவர் ஆடம்ஸ்

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?