இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையும், இரண்டாம் வருகையும்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை எத்தனை முறை உள்ளது?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இரண்டு முறை இந்த உலகத்திற்கு வரப்போகிறார்.
1)இரகசிய வருகை & 2)பகிரங்க வருகை
1) இரகசிய வருகை:
இந்த கடைசிக் காலங்களில் தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக் கொள்ள வரும் வருகையே இரகசிய வருகை.
இந்த வருகையை ஏன் இரகசியம் என்று சொல்ல வேண்டும்?
"கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்"(2பேது3:10).
ஒரு மகா பரிசுத்தமான தேவனை ஒரு திருடனுக்கு ஒப்பாக ஏன் ஆவியானவர் சொல்கிறார்?
ஏனென்றால் திருடன் வரும்போது எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வரமாட்டான். இந்த உலகத்தில் உள்ள மக்கள் அயர்ந்த நித்திரையில் இருக்கும்போது வருவான். வந்து வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருள்களை எடுத்துச் செல்வான். அதைப் போல இந்த உலகம் என்ற வீட்டில் உள்ள பாவியான மக்கள் அறியாத நேரத்தில் வந்து விலை உயர்ந்த பொருளான தன்னுடைய பரிசுத்தவான்களை இரகசியமாக தன்னோடு சேர்த்துக்கொள்கிறார். இதையே இரகசிய வருகை என்று சொல்கிறார்.
இரகசிய வருகை என்றால் என்ன?
கர்த்தருடைய வருகையை ஏன் ஆவியானவர் இரகசிய வருகை என்று சொல்கிறார்?
"கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்".(அப் 1 :11).
எனக்கு அன்பான தேவனுடைய பிள்ளைகளே, நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம், நம் கர்த்தருடைய வருகையைக் குறித்து வேதாகமத்தில் ஆவியானவரால் தம்முடைய பரிசுத்த அப்போஸ்தலர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளைக் கொண்டு வேதவசனங்களை அறிந்து, கைக்கொண்டு ஆயத்தமாவதே பூரண ஆயத்தமாகும்.
வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களில் இருக்கும் 260 அதிகாரங்களில் 318 இடங்களில் நம் ஆண்டவரின் வருகையைக் குறித்து "கர்த்தர் வருகிறார்" என்று ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளது.
இவைகளில், "தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்." (எபி.9:28) என்றும், தம்முடைய பரிசுத்த பிள்ளைகளை உலகம்(பாவிகள்) அறியாதபடி, "இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய நாள்வருமென்று"(1தெச 5:2) ஆவியானவரால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, "இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்"(1கொரி 15 :51) என்று ஆவியானவர் எழுதியுள்ளபடி கர்த்தர் இரகசியமாய் இவ்வுலகில் வந்து தம்முடைய பரிசுத்தவான்களை சேர்த்துக் கொள்ளும் இவ்வருகையையே இரகசிய வருகை என்று ஆவியானவரால் அறிவிக்கப்படுகிறது. இதுவே இரகசிய வருகை என்று ஆவியானவர் சொல்கிறார்.
ஆவிக்குரிய மண்டலத்தில் இந்தத் தேவ தீர்மானத்தை தெளிவாக அறிவிக்காமல் "இயேசு வருகிறார் உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு" என்று அறிவித்தால், இது ஒரு பொதுவான அறிவிப்புமாகவே இருக்குமே தவிர பரிசுத்தவான்களின் மீட்பிற்காக வர இருக்கும் கர்த்தருடைய இரகசிய வருகையை வலியுறுத்தி, ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து (எசே.38:7) என்ற அழைப்பை அறிவிக்காத அழைப்பாகவே இருக்கும்.
இரகசிய வருகையே பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொள்கின்ற வருகையாகும். "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்".(வெளி 2:11).
2)பகிரங்க வருகை:
இரகசிய வருகைக்குப் பின்பு இந்த பூமியில் கர்த்தரின் ஆயிரவருட அரசாட்சி அதன் பின்பு தான் "பகிரங்க வருகை" அல்லது "இரண்டாம் வருகை" என்று சொல்லலாம். (வெளி 20:9) "அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்து கொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது". இரகசிய வருகைக்குப் பின்பு இந்த உலகத்தில் இயேசுவும் அவருடைய பரிசுத்தவான்களும் சேர்ந்து ஆயிர வருட அரசாட்சி செய்கிறார்கள் . ஆயிர வருட அரசாட்சியின் இறுதி வேளையிலே சாத்தானும் அவனோடு இந்த உலகத்தில் வாழும் பாவியான மக்களும் சேர்ந்துக் கொண்டு பரிசுத்தவான்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வரும்போது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி புறப்பட்டு அவர்களை பட்சித்துப்போட்டது. பூமியும் அதில் உள்ள யாவும் அழிந்து போயின. அதன் பின்பே நியாயத்தீர்ப்பு. ஆனபடியினாலே பாவிகளை நியாயந்தீர்க்க வருவதே பகிரங்க வருகை அல்லது இரண்டாம் வருகை என்று சத்திய வேதாகமம் நமக்கு போதிக்கிறது .
இந்த இரண்டாம் வருகையானது பாவிகளை நியாயந்தீர்க்க வருகின்ற வருகை. "தேவனை அறியாதவர்களுக்கும் நம்முடைய கர்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை செலுத்தும்படிக்கு ( 2 தெச 1:7)அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்க நியாயாதிபதியாய் வருகிறார்". இந்த வருகை இரகசிய வருகை போன்றது அல்ல! இரகசிய வருகையில் தமது பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொள்ள வரும் போது "ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்"(1தெச 4 :16) இந்த இரகசிய வருகையில் மகிழ்ச்சியோடும், ஆரவாரத்துடனும் வருகிறார். ஆனால் இரண்டாம் வருகையில் அக்கினிமயமான தேவனாய் நியாயந்தீர்க்க வருகிறார்.
இரண்டாம் வருகையைக் குறித்த சில வேத வசனங்கள்:
1)"இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்"(வெளி 1 :7 )
2) "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்"(2பேது 3 :10)
3) "கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது. அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது. கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்"
(செப் 1 :14)
4) "தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்"(யூதா 1:6)
இந்த பகிரங்க வருகையில் அன்பின் ஆண்டவர் இயேசுவை உலகத்தில் வாழ்கின்ற பாவியான எல்லா மனிதர்களும் காண்பார்கள். இயேசுவை குத்தின இஸ்ரவேலர்களும் அவரை காண்பார்கள். சமுத்திரத்திலுள்ள எல்லா கடல்மச்சங்களும் அவரை காணும். வானம், பூமி யாவும் அவரைக் காணும். இந்த பகிரங்க வருகை அல்லது இரண்டாம் வருகையில் வருகின்ற அக்கினிமயமான இயேசுவை காணாத ஒருவரும் இருக்க முடியாது. கண்கள் யாவும் காணும்படியாக வெளிப்படையாக, பகிரங்க வருகையில் இயேசு வருகிறார்.
இரகசிய வருகையில் சேர்ந்துக்கொண்ட பரிசுத்தவான்களைக் கொண்டு இயேசு இராஜாதி இராஜாவாக பூமியில் 1000 ஆண்டு ஆட்சி செய்வார். இந்த ஆயிரம் ஆண்டு இறுதி வேளையில் சாத்தான் "பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான், அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள், அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது".(வெளி 20:8,9) இந்த வசனத்தின்படி அனைவரையும் அக்கினி பட்சித்துப்போட்டதாக படிக்கிறோம். இதையே இரண்டாம் வருகை அல்லது பகிரங்க வருகை என்று ஆவியானவர் கூறுகின்றார்.
ஆனபடியினாலே அருமையான கர்த்தருடைய ஜனமே, பகிரங்க வருகையானது பாவிகளை நியாயந்தீர்க்க வருகின்ற வருகையே தவிர பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொள்ளும் வருகை அல்ல! இந்த "இரண்டாம் வருகை பாவிகளை பட்சித்துப் போடக் கூடிய வருகை". இதை தெளிவாய் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.
"இரகசிய வருகை பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொள்ளும் வருகை".
"பகிரங்க வருகையானது பாவிகளை நியாயந்தீர்க்க வருகின்ற வருகை".
இதை நாம் மிகவும் தெளிவாய் அறிந்து கொண்டு பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொள்ளும் இரகசிய வருகைக்கு என்று ஆயத்தமாகி இயேசுவின் இரகசிய வருகையில் சேர்ந்துக்கொள்ள இயேசு அழைக்கிறார். கர்த்தரின் இரகசிய வருகைக்கு என்று ஆயத்தமாகுவோம்.
Credits.........
Pr I.ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
Comments
Post a Comment