சாரமுள்ள உப்பு

சாரமுள்ள உப்பு

'நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது' - (மத்தேயு 5:13)

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அப்படியென்றால் உப்பு அவ்வளவு முக்கியம்! ஆம், தேவ பிள்ளைகளாகிய நம்மை தேவன் இவ்வுலகிற்கு உப்பாக வைத்திருக்கிறார். சிறிது உப்பு போட்டாலும் உணவிற்கு அற்புத சுவை கூடும். அது போல சிறு எண்ணிக்கை கிறிஸ்தவர்கள் பெரும் இந்திய மக்களுக்கு உன்னதமான இரட்சிப்பை கொண்டு வர முடியும். உணவை கெட்டு போகாமல் காக்கும் தன்மை உப்பிற்கு உண்டு. அதுபோல திருச்சபை உயிர்த்துடிப்போடு செயல்படும்போது அது அகில உலகையும் பாதுகாக்கும். உப்பு, கடல் நீரிலிருந்து பிரிக்கப்படுவது போல தேவ பிள்ளைக்ள உலகத்தின் அசுத்தத்திலிருந்து பிரிந்து வாழ்கிறவர்களாக காணப்படவேண்டும்.

ஒருமுறை ஒரு அம்மையார் ஊழியர் ஒருவரிடம், 'தேவன் தமது பிள்ளைகளை மிகவும் மலிவான உப்போடு ஏன் ஒப்பிட்டு கூறுகிறார்? வைரம், தங்கத்திற்கு ஒப்பிட்டு பேசியிருக்கலாமே' என்று கேட்டார்களாம். உண்மையில் உப்புக்கு நிகராக எந்த பொருளையும் நாம் உபயோகிக்க முடியாது. சர்க்கரைக்கு பதில் வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கணடு போன்றவற்றை உபயோகிக்கலாம். மின்சாரம் இல்லையானால், விளக்கு, மெழுகுவர்த்தி போன்ற ஒளி தரும் பொருட்களை உபயோகிக்கலாம். ஆனால் எந்த பொருளையும் உப்புக்கு நிகராக உபயோகிக்க முடியாது. அனந்த ஞானமுள்ள இறைவன் தனித்தன்மை வாய்ந்த உப்பையே தம் பிள்ளைகளுக்கு ஒப்புமைப்படுத்துகிறார்.

'நல்ல தண்ணீருக்காக மாநிலங்களுக்கு நடுவே, ஊர்களுக்கு நடுவே எத்தனையோ சண்டைகள் வருகிறதே, பூமியில் மூன்றில் இரண்டு பாகமாக உள்ள கடல் நீரை நல்ல தண்ணீராக நம் தேவன் சிருஷ்டித்திருக்கலாமே' என்றார் ஒருவர். உலக அசுத்தங்களும், கழிவுகளும் அநேகம். அவைகளெல்லாம் நதிகள் மூலம் கடலில் தான் போய் சங்கமம் ஆகிறது. ஆனால் பாருங்கள், கழிவுகளின் விஷத்தன்மையால் கடல் நீர் துர்நாற்றம் வீசுவதில்லை. ஒருவேளை கடல் நீர் நல்ல தண்ணீராக இருந்திருந்தால் துர் நாற்றமாக மாறியிருக்கும். உலக சுகாதாரத்தையே பாதுகாக்கும் உப்பு போல நாமும் எல்லா காரியங்களிலும சாரமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அன்பானவர்களே, சாரமுள்ள உப்பின் நன்மைகளை பார்த்தீர்களா? அதே வேளையில் இந்த உப்பு வருடக்கணக்காக உபயோகிக்கப்படாமல் அப்படியே கிடக்குமானால், அது தனது சாரத்தன்மையை இழந்து விடும். பின் அதை வெளியே குப்பையில் போய் எறியத்தான் வேண்டும்;. உப்பாகிய உங்களிடம் சாரமுள்ளதா, உங்கள் சந்ததியாரை கர்த்தருக்காய் வளர்த்து, அவர்க்ள ஆத்துமாக்களை பாதுக்கிறீர்களா? உலகின் பல்வேறு அசுத்தங்களுக்குள் நாம் காணும்போது, விசுவாசியாய் சாட்சியை காத்து கொள்கிறோமா?, அல்லது தேவன் தந்த அனைத்து தாலந்துகளையும் கிருபையையும் உபயோகமின்றி வைத்து காலப்போக்கில் சாரத்தையே இழந்து விடுகிறோமா? உலகிற்கு உப்பாய் நாம் ஜீவிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?