நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17:15-19).

ஒரு மனிதன் லண்டனில் ஒரு இடத்திற்கு போவதற்காக இரயிலில் ஏறினான். அவனுக்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள். இரயில் புறப்பட்டு 20 நிமிடம் இருக்கும். அந்த இரண்டு வாலிபர்களில் ஒருவனுக்கு திடீரென்று வலிப்பு வந்து, இழுக்க ஆரம்பித்தது. உடனே பக்கத்தில் இருந்த மற்ற வாலிபன், தன் மேல் உடையை கழற்றி, வலிப்பு வந்த வாலிபனின் தலைக்கு அடியில் வைத்து, வாயில் வந்த நுரையை துடைத்து, அந்த வலிப்பு நிற்கும் வரை காத்திருந்து, வேர்வையை துடைத்து, அந்த வாலிபனை மீண்டும் அவன் இடத்தில் அமர பண்ணினான். அதை ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்த மற்ற பிரயாணியிடம் திரும்பி, 'ஐயா, ஒரு நாளில் இவனுக்கு மூன்று அல்லது நான்கு முறை இந்த வலிப்பு வருகிறது. நானும் இவனும் நண்பர்கள். நாங்கள் இரண்டு பேரும், வியட்நாம் போரில் ஈடுபட்டவர்கள். அந்த போரில் இரண்டு பேரும் அடிபட்டோம். ஏன் இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்து, நான் நடக்க முடியாமல் போனது, இவனது தோளில் ஒரு குண்டு பாய்ந்தது. எங்களை காப்பாற்ற வர வேண்டிய ஹெலிகாப்டர் ஏதோ காரணத்தினால் வரவேயில்லை.

இந்த என் நண்பன், நடக்க முடியாத என்னை தன் தோளில் சுமந்து கொண்டு, மூன்றறை நாட்கள் நடந்து ஒரு பெரிய காட்டை கடந்தோம். வழியில் வியட்நாம் போர் வீரர்கள் எங்களை குறி வைத்து, குண்டுகளை வீசி கொண்டே இருந்தார்கள். நான் இவனிடம், 'என்னை கீழே போட்டு விட்டு நீ தப்பித்து கொள்' என்று எத்தனையோ முறை சொன்னேன். ஆனால் இவனோ என்னை கீழே விடவே யில்லை. அந்த பயங்கர காட்டிலிருந்து தப்பி எப்படியோ வெளியே வந்தோம். என் உயிரை இவன் காப்பாற்றினான். எதற்கு காப்பாற்றினான், எப்படி காப்பாற்றினான் என்பதை நான் அறியேன். நான்கு வருடங்களுக்கு முன்பு இவனுக்கு இந்த வியாதி இருப்பதை கண்டேன். நான் நியூயார்க் நகரத்தில் இருந்த வீட்டை விற்று விட்டு, இவனை கவனித்து கொள்ள இவனோடு கூட நான் இருக்கிறேன். இவன் எனக்கு செய்தததற்காக நான் என்ன வேண்டுமானாலும் இவனுக்காக செய்ய தயார்!' என கண்களில் நீர் மல்க கூறினான்.

இந்த உலகத்தில் ஒரு மனிதன் மற்றவன் தன் உயிரை காப்பாற்றியதற்காக தன் வாழ்நாளெல்லாம் அவனுடன் இருந்து அவனை காப்பாற்ற முன்வருவானேயாகில், தம் ஜீவனையே நமக்காக கொடுத்து, நம் பாவங்களை கழுவி, நம்மை நித்திய ஜீவனுக்கு தகுதிப்படுத்திய நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நாம் எத்தனை நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும்! 'அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே' என்று ஆச்சரியப்படுவதை காண்கிறோம். இயேசுவினிடத்தில் வந்து சுகம் பெற்றவர்கள் பத்து குஷ்டரோகிகள். குஷ்டரோகம் அந்த நாட்களில் மிகவும் சபிக்கப்பட்ட வியாதியாய் இருந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், மற்ற மக்களோடு இணையாக ஜீவிக்க முடியாது. 'அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, 'தீட்டு, தீட்டு' என்று சத்தமிடவேண்டும். அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளையத்துக்குப புறம்பே இருக்கக்கடவது' (லேவியராகமம் 13:45-46). அப்படிப்பட்ட கொடிய வியாதியை உடையவர்களாயிருந்த, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்த பத்து பேரை இயேசுகிறிஸ்து கிருபையாக சுகப்படுத்தினார். சுகம் அடைந்த அந்த பத்துப்பேரில் ஒருவன் மாத்திரம் திரும்பி வந்து, முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தி அவரை பணிந்து கொண்டான். மற்றவர்களோ நன்றியில்லாதவர்களாக தேவன் தங்களுக்கு செய்த மகத்தான கிருபையை மறந்தவர்களாக, நன்றி சொல்ல தவறினார்கள்.

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை (கொலோசேயர் 1:13) நாம் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஸ்தோத்தரித்திருக்கிறோமா? நான் ஒரு கிறிஸ்தவன் என்று ஏதோ வாழ்கிறேன் என்று தேவன் நமக்கு செய்த நன்மைகளை அறியாதபடி, நன்றியில்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? பாவம் என்னும் கொடிய குஷ்டரோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நம்மை அவர் தமது மாசில்லாத விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே கழுவி சுத்தப்படுத்தினாரே, அவருக்கு எந்த விதத்தில் நன்றியுள்ளவர்களாக ஜீவிக்கிறோம்? அவருக்காக எதையாவது செய்கிறோமா? நீர் என்னை கழுவி சுத்திகரித்தீரே உமக்கு நன்றி என்று சொல்கிறோமா? நன்றியுள்ளவர்களாக இருந்தால், திரும்ப அந்த பாவ ஜீவியத்தை விட்டு பரிசுத்தமாக வாழ்கிறோமா? நம்மையே சோதித்து பார்த்து, அவருக்கு நன்றியாய் ஜீவிக்க அவருக்காய் வாழ நம்மையே அர்ப்பணிப்போமாக!

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?