பெண்ணின விடுதலைப் போரில் ஏமிக்கார்மைக்கேல்

பெண்ணின விடுதலைப் போரில் ஏமிக்கார்மைக்கேல்!

இந்தியப் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களுள் அயர்லாந்து நாட்டுப் பெண்ணான ஏமிக்கார்மைக்கேல் முதன்மையானவர். 

19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு கிறிஸ்தவ சமயப் பணிக்கென்று வந்த இவரை இச்சமூகம் தன்னைச் சுத்திகரிக்கும் பணிகளில் பயன்படுத்திக் கொண்டது. கி.பி. 1895-ம் ஆண்டு சென்னைக்கு வந்து சேர்ந்த இவர் தமிழகத்தில் தனது பணியைச் செய்வதென்ற முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணைவிளை என்ற ஊரில் ஏற்கெனவே அங்கு கிறிஸ்தவச் சமயப்பணி செய்துக் கொண்டிருந்த மிஷனரி உவாக்கர் தம்பதியினரோடு இணைந்து தமது சமயப்பணியினை பெண்களிடையே மேற்கொண்டார்.

சுற்றுவட்டார கிராமங்களில் தாம் கொணர்ந்த சமய நம்பிக்கைகளை அளிக்க விளைந்த போது தான், இச்சமூகத்துப் பெண்களின் அவலநிலைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. அதனிமித்தம் மிகவும் மனமுடைந்த அவர் முதலில் அவர்களுக்கு இச்சமூகத்தின் கோரப்பிடியில் இருந்து விடுதலை தான் தேவை என்பதை உணர்ந்தார். தாம் வசித்த பகுதிகளைச் சுற்றின கிராமங்களின் தெருக்களில் அடிமைகளாக வாழ்ந்த பெண்களின் நிலைமைகளை மாற்றும் முயற்சியில் இறங்கினார் . ஆறேழு வயதுகளிலேயே திருமணம் செய்து வைக்கப்படும் பெண் குழந்தைகளின் பரிதாப நிலையையும் அதனால் அவர்களடைந்த சொல்லொண்ணா துயரங்களையும் கண்டு வெகுண்டார். அவர்களுள் சின்னஞ்சிறு வயதுகளிலேயே கைம்பெண்களாகி வாழ்நாளெல்லாம் சித்திரவதைக்குள்ளாகும் பரிதாப நிலைமையும் ஏமிக்கார்மைக்கேலை வெகுவாகப் பாதித்தது. அத்தகையோரை கிராமம் கிராமமாகச் சென்று கிறிஸ்துவின் அன்பை எடுத்துக் கூறி ,பிறர் முகம் பார்க்க கூடாதென்ற சமூகக்கட்டுக்குள் கிடந்த பெண்களை தனது ஆதரவான பேச்சாலும் உதவிகளாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் பெண்களை அடிமைப்படுத்தியவற்றிலிருந்து வெளியில் கொண்டு வந்தார். அவரது அறிவுரைகளைஏற்று அவரோடு இணைந்து சமூகப் பணியாற்ற விரும்பிய பெண்களைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு தமது சமூகப்பணியையே மகத்தான சமயப்பணியாக உணர்ந்து செயல்பட்டார். சொந்த குடும்பத்தாராலும் சமூகத்தாலும் புறந்தள்ளப்பட்டப் பெண்கள் ஏமிக்கார்மைக்கேலுடன் இணைந்து கொண்டனர். துயரம் நீங்கி மனதளவில் விடுதலையடைந்த அப்பெண்களுக்கென்று காப்பகம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களோடு வாழ்ந்தார். அக்காப்பகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தாலுகாவில் உள்ள டோனாவூர் என்ற ஊரில் இன்றுவரை அவரது சமூகப்பணிக்கு உயிருள்ள சாட்சியாக உள்ளது. 

அத்தோடு சமயச்சடங்கு என்ற பெயரில் பக்தியின் வேடம் பூண்டு பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்குள் தள்ளிய “தேவதாசி முறை” என்று அழைக்கப்பட்ட இந்திய சமயச் சடங்கிலிருந்து அப்பெண்களை மீட்டெடுத்து அக்கொடிய முறையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் ஏமிக்கார்மைக்கேல் தான்.

இத்தேவதாசி முறையாவது, தேவன்+தாசி = இறைவனுக்கு அடிமை என்ற பொருளில் கோவில்களில் இருந்த விக்கிரகங்களுக்கு தொண்டு செய்ய பெண் பிள்ளைகளை அர்ப்பணிக்கும் நோக்கோடு ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமயம் சார்ந்த நடைமுறையாகும்.

தெய்வத் தொண்டு செய்வதற்கென்று வீட்டிற்கு ஒரு பெண் குழந்தையை நேர்ந்து விடுவது... அக்குடும்பம் சொர்க்கத்தில் தப்பாமல் இடம்பிடிக்கும் என்றும் இம்மையிலும் சிறப்போடு வாழும் என்றும் மக்களை நம்ப செய்திருந்தது அச்சமூகம். இதன்படி கோவிலுக்கென்று விடப்பட்ட குழந்தை ஏழுவயது முதல் பதினொரு வயதிற்குள் அவள் பூப்பெய்தும் முன் கோவில் பூசாரியால் மங்களநாண் (தாலி) அணிவிக்கப்பட்டு அக்கோவிலில் உள்ள விக்கிரகத்திற்கு மனைவி என்ற அந்தஸ்தோடு அழைத்துச் செல்லப்படுவாள். இந்நிகழ்வு “பொட்டுக்கட்டுதல்” எனப்படுகிறது. 

இதன்பிறகு அவள் அக்கோவிலில் தான் இருந்தாக வேண்டும். அவளது பணிகளாக கோவிலைச் சுத்தம் செய்வது, விளக்கேற்றுவது, மாலைகள் கட்டுவது போன்றவை அளிக்கப்படும். அவளுக்கு இசையும் நாட்டியமும் கற்பிக்கப்படும். இவர்கள் அக்கோவில் திருவிழாக் காலங்களிலும் வேறு விசேஷித்த நாட்களிலும் விக்கிரகங்கள் எடுத்துச் செல்லப்படும் போது நடனமாடுவர். இதனால் இவர்கள் “ஆடல் மகளிர்” எனவும் அறியப்பட்டனர். 

இத்தகைய பணிகளுக்காக கோவில்களில் அர்பணிக்கப்பட்ட இத்தேவதாசியர் காலப்போக்கில் ஆட்சி மாற்றங்கள், அந்நியர் படையெடுப்பு, குறுநில மன்னர்களிடையே ஏற்பட்ட குழப்பநிலைகள் போன்ற மாற்றங்களால் கோவில் நிர்வாகம் மன்னர்களின் நேரடி பார்வையிலிருந்து விடுபட்டு கோவில்கள் அமையப்பெற்ற ஊர் பெரியவர்களின் பொறுப்பில் வந்தன. இந்நிலைக்குப் பின்னர் தேவதாசிகளின் வாழ்க்கை அந்த ஊர்ப் பெரிய மனிதர்களை நம்பியே இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதனால் அவர்களது( பெரிய மனிதர்களது)உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்து தேவைகளையும் தேவதாசியரே பூர்த்திசெய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதன் விளைவாக மெல்ல மெல்ல தங்கள் புனிதத் தன்மையை இழந்த தேவதாசியர் மக்களால் பொது மகளிராகவே பார்க்கப்படும் நிலையை அடைந்தனர். நாளடைவில் “தேவரடியாள்” என்று அழைக்கப்பட்ட அவர்கள் பின்னர் “தாசி” என்ற வசைச் சொல்லுக்கு ஆளாகும் நிலையை அடைந்தனர். 

18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்குள் நுழையும்போது இத்தேவதாசியர்களின் நிலை மிகவும் இழிவானதாகவே இருந்தது. அந்நிலையில் தான் ஏமிக்கார்மைக்கேல் இந்தியா வந்தார். 

தேவதாசியரின் உண்மையான நிலைமையை அறிந்தும் தவறான நம்பிக்கைகளாலும் சமூகப் பண்பாட்டு அழுத்தங்களாலும் தம் பிள்ளைகளை தெய்வத்திற்கே அடிமையாக்குவதாகக் கருதி தொடர்ந்து நேர்ந்து விட்டுக் கொண்டு தான் இருந்தனர். சமூகத்தின் அந்நிலையை மாற்ற தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஏமிக்கார்மைக்கேல். அத்தகைய பெண் குழந்தைகளை தனது அறிவார்ந்த செயல்களால் மீட்டெடுத்து தனது காப்பகத்தில் வைத்துக் காப்பாற்றினார். 

இதனை ஏற்காத தேவதாசியால் பயனடைந்தோர் ஏமிக்கார்மைக்கேலை, சமயத்துரோகம் இழைப்பதாகவும் கலாச்சார சீரழிவிற்கு வித்திடுவதாகவும் குற்றம் சாட்டினர். அவர் மீது பொய்யான வழக்குகளும் போடப்பட்டன. அவற்றையெல்லாம் துணிச்சலோடு மேற்கொண்டு தனது நேர்மையான அணுகுமுறைகளாலும் உண்மையான செயல்பாடுகளாலும் வெற்றிக் கொண்டார். 

பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த இத்தேவதாசி முறையினை எதிர்த்துப் போராடிய அயல்நாட்டுப் பெண்ணான ஏமிக்கார்மைக்கேலுக்குப் பின்னரே, சுமார் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகே டாக்டர் முத்தலட்சுமி ரெட்டி, திருமதி. மூவலூர் இராமாமிர்தம் ஆகிய இந்தியப் பெண்களின் குரல்களும் இணைந்து தேவதாசிமுறைக்கு எதிராக ஒலிக்கத் தொடங்கின. இதன் விளைவாக 9-10-1947ம் நாள் தமிழ்நாடு தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

சமூகத்தைச் சீரழித்தும் சமூகத்தால் சீரழிக்கப்பட்டும் வந்த தேவதாசிகள் என்ற ஒரு சமூக அமைப்பையே வேரறுக்க முழுமுதற் காரணமாக அமைந்த ஏமிக்கார்மிக்கேலின் சமூகப்பணியினைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசு அவரைக் கௌரவித்துள்ளது. அதன்படி 1919ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக இருந்த பென்ட்லாண்ட் என்பவர் மூலம் அவருக்குப் பதக்கம் அளிக்கப்பட்டது. 

தாம் மீட்டெடுத்த, கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் தேவதாசியராக அர்பணிக்கப்பட்டு மீட்கப்பட்ட பெண் குழந்தைகளை வாழ்விக்க தனது முழு வாழ்வையும் அர்பணித்தவர். தனக்கென்று ஒரு குடும்ப வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளாத புரட்சிப்பெண் ஏமிக்கார்மைக்கேல் ஏற்படுத்திய டோனாவூர் காப்பகம் (Dohnavur Fellowship) இன்றும் தனியொரு சமுதாயமாக அவரது விடுதலைப் பணிக்குச் சாட்சியாக உள்ளது. அவரால் வளர்க்கப்பட்ட அநேகர் இன்றும் உலகெங்கும் பரவி அவர்தம் பெயரைப் பறைசாற்றி வாழ்ந்து வருகின்றனர். 

மக்கள் தொண்டினையே இறைத்தொண்டாகக் கருதி வாழ்ந்த ஏமிக்கார்மைக்கேல் தான் , தமிழகத்தில் தேவதாசி முறையை எதிர்த்த முதல் பெண் என்ற உண்மையை தேவதாசி முறையைப் பற்றின ஆய்வுகளை நிகழ்த்தி வரலாற்றில் பதிவு செய்யும் வரலாற்றாசிரியர்கள் எவருமே தமது நூல்களில் குறிப்பிடவில்லை என்பதே வருந்தத்தக்க செயலாகும்.

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?